இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Sunday, January 29, 2012

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் மீலாத் விழாக்களில் பங்கேற்று சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் சென்ற முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர்ரஹ்மான் மன்பஈ 
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் மாபெரும் ஷரிஅத் போராட்ட மாவிரராகும் 
நாமெல்லாம் புனித மஸ்ஜித்களிலும் சமுதாய மேடைகளிலும் வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அழகார்ந்த அன்பார்ந்த தூய்மையான வாழ்வைப்பற்றி வாய் இனிக்க பேசி மகிழ்கிறோம் 
நம்முடையத் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்கள் பற்றியும் புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டங்களின் மகத்துவம் பற்றியும் மஸ்ஜித்களிலும்,மதரஸாக்களிலும் , சமுதாய மேடைகளிலும் சிறப்புரையாற்றியதோடு 
மாராட்டிய மாநில சட்டமன்றத்திலும் ,நாடாளுமன்ற மக்களவையிலும்  புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டம் பற்றியும் மணி மணியாய் மணிக்கணக்கில் நம் நாட்டின் பிரதமர்,மத்திய அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுமே வியக்க தக்க அளவில் இஸ்லாமிய சட்டவியல் பற்றி உரையாற்றியுள்ளார் 
ஷாபானு வழக்கு பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் ஷரிஅத் சட்டம் மனித சமுதாயத்துக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு உரிமைப் பற்றியும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கு  இஸ்லாமிய  ஷரிஅத் வழங்கியுள்ள உரிமைப்பற்றியும், சிறப்புப்பற்றியும் உலக சமுதாயத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார் .
நம் உயிரினும் மேலான உத்தமத்தலைவர் நபிகள் பெருமானார் அவர்களின் அழகிய வழிகாட்டுதலால் மனித சமுதாயத்துக்கும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கும் கிடைத்துள்ள சிறப்புப்பற்றி நாடாளுமன்றத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக விளக்கவுரை - தெளிவுரை நிகழ்த்தியதை நம் நாட்டு பிரதமர் மறைந்த மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்த செய்தி சரித்திரச்செய்தியாகும் இதை தமிழகத்தின் மேடைகள் எங்கும் நம் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் சொல்லிக்காட்டியச் செய்தி மறக்க முடியாத நிகழ்வாகும் .
2004 ஆம்  ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நம் தலைவர் முனிருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்களுடன் அடியேனும்  நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தில்  பனாத்வாலா சாஹிப் அவர்கள் எம்.பி.யாக பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற  கூட்டம் நடைப்பெற்ற காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றியும் , ஷரிஅத் பற்றி - வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்வியல் பற்றி  நாடாளுமன்றத்தில் பேசியுள்ளச் செய்தியை நெஞ்சுருக குறிப்பிட்டார்கள் .
நாடாளுமன்றம் கூடியக் காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பதிவுச் செய்துள்ள பனாத்வாலா சாஹிப் அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டினார் .
2008  ஆம் ஆண்டில் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் ரப்பிவுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஒவ்வொரு நாளும் வள்ளல் நபிகள் நாயகம் பெருமானார் அவர்களின் பிறந்த தின விழாவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் செய்யத் முஹமத் ஹாஜியார் நடத்திக் கொண்டிருந்தார் விழாவின் துவக்க நாளன்று தலைவர் பேராசிரியர் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்று துவக்கவுரையற்றிய முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களின் உரை இன்றும் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது .
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடுகள் ,பொதுக் கூட்டங்கள் ,பள்ளிவாசல் திறப்பு விழாக்கள்  ஷரிஅத் மாநாடுகள் ,அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாக்கள் ஆகியவற்றில் அதிகமாக பங்கேற்றுள்ளார் .திருச்சி மாநகரில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட  மீலாத் விழா மாநாடு ,ஊர்வலத்தில் பங்கேற்று உரையாற்றி சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்துள்ளார் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் ,சேலம் மாநகரிலும்  மீலாத் விழாக்களில் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தி சமுதாயத்தை சரியான பாதையில் எழுச்சி பெறச் செய்துள்ளார் .கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் .நகர  முஸ்லிம் லீக் சார்பில் அன்னை கதீஜா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற மீலாத் விழாவில் கலந்துக்கொண்டு வள்ளல் நபியின் தூய்மையான வாழ்வில் அற்புத சேவையாற்றியுள்ள அன்னை கதீஜா நாயகி அவர்களின் பெயரைப்பெற்றுள்ள மகளிர் பள்ளியின் வளாகத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்வடைகிறேன் என்று  பனாத்வாலா  சாஹிப் நிகழ்த்திய உரை அனைவரையும்  நெகிழ வைத்தது 
ஆசிக்கே ரசூல் பனாத்வாலா சாஹிப் அவர்கள் .
அடியேன் மாண்புமிகு மதீனாவில் பணியாற்றிய காலத்தில் மும்பை வழியாக அடியேன் பயணம் செல்லும் காலமெல்லாம் மும்பையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்று பயணம் சொல்லி போகும் போதெல்லாம் நபிகள் பெருமானார் ரசூல்(ஸல்) அவர்களின் தர்பாரில் என் ஸலாம் சொல்லுங்கள் என்று ஸலாம் சொல்லி சலவாத்து ஓதி மகிழ்வார் அதை நினைக்கும் போதெல்லாம் இன்னமும் எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன் .
இவரின் சேவையை அங்கீகரித்து கப்ரில் பிரகாசத்தை வழங்கி சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை கருணையுள்ள ரஹ்மான் வழங்குவானாக !

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் மீலாத் விழாவை நாடெங்கும் நடத்தி மகிழ்வோம்


மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ 
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள்  பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை நாடெங்கும் நடத்தி நற்குணத்தின் தாயகம் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அழகார்ந்த அன்பார்ந்த வாழ்வைப்பற்றி நாட்டு மக்களிடையே சுட்டிக்காட்டுவதும் சொல்லிக்காட்டுவதும் நமது கடமையாகும் 
இருளைப்பார்த்து இருளே போ-போ- என்று கோஷம் போடுவதை விட அங்கு ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய்விடும் அந்த வகையில் நபிகள்  பெருமானார் அவர்களின் நற்குணங்கள் ,அழகான உபதேசங்கள் பற்றி உரையாற்றுவதால்  மக்கள் சமுதாயத்தில் மனித நேயத்தையும் ,மத நல்லிணக்கத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது .
75 ஆண்டுகளுக்கு முன்னர் மீலாத் விழா நடத்தலாமா வேண்டாமா ? என்ற கருத்துப்பரிமாற்றங்கள் வாத விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்ற போது  வள்ளல் நபிகள்  பெருமானார் அவர்களின் பிறந்த தின விழாவை நடத்தி நாட்டு மக்களிடையே இஸ்லாமிய மார்க்க உணர்வை ஊட்டுவது மேலும்  வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களைப்பற்றி அவர்களின் அறிவார்ந்த கருத்துக்களைப்பற்றி பேசுவதால் மீலாத் நடத்தும் பகுதியும் நிலமும் வளம் பெறுகிறது மீலாத் விழா நடத்துபவர்கள் வாழ்வும் வளம் பெறுகிறது என்று தென்னகத்தின் தாய்க்கல்லூரி வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியின் முதல்வர் ஷரியத்தின் சட்டவியல் மேதை அல்லாமா ஷெய்கு ஆதம் ஹஜ்ரத் ,சிறப்புமிகு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கலூரியின் முதல்வர் அறிவுலக மேதை அமானி  ஹஜ்ரத்,புகழ்மிகு நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கலூரியின் முதல்வர் மௌலானா முஹமத் இப்ராஹிம்  ஹஜ்ரத் ,பன்னூல் ஆசிரியர்கள்  உத்தமபாளையம் மௌலானா முஹமத் அப்துல் காதர்  ஹஜ்ரத் ,பி.எஸ்.கே.முஹமத் இப்ராஹிம்  ஹஜ்ரத்,தியாகச்செம்மல் திருநெல்வேலி மௌலானா அபுல்ஹசன் ஷாதலி  ஹஜ்ரத் மற்றும் ஏராளமான மூத்த உலமாக்கள் மீலாத் விழா நடத்துவதன் அவசியம் பற்றி நாடெங்கும் உரையாற்றியுள்ளார்கள் .
ஊர் ஊரக சுற்றி உத்தம நபிகள் பெருமானார் அவர்களைப்பற்றி உரையாற்றி இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியை சுற்றியுள்ள வட ஆற்காடு மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும்  பெருமானார் அவர்களின் பிறந்த மாதமான ரபிவுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் பிறை 12 வரை  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியில் பணியாற்றிய தலைச்சிறந்த பேராசிரியர்களை அழைத்து மீலாத் விழாக்கள் சிறப்புடன் நடைப்பெற்றது 
லால்பேட்டை ஜெ.எம்.ஏ .அரபிக்கலூரியை சுற்றியுள்ள தென்னாற்காடு மாவட்டத்திலும் ,நீடூர் ஜெ.எம்.ஹெச்.அரபிக்கலூரியை சுற்றியுள்ள தஞ்சை மாவட்டத்திலும்  தலைச்சிறந்த உலமாக்களை அழைத்து தொடர் சொற்பொழிவு நடத்தி மீலாத் விழா நடத்தப்பட்டது .
மீலாத் விழாக்கள் நடத்திய காலமெல்லாம் எங்கும் அன்பும் அமைதியும் நிலவியது ,மீலாத் மாநாடுகளில் பொது மேடைகளில் நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி ,அவர்களின் அழகிய முன்மாதிரியை பற்றி பேசியதால் நாட்டு மக்களிடையே ,இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே நல்ல இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டது இதையொட்டியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளிலெல்லாம் மீலாத் விழா நடத்தி- உரையாற்றி - சமுதாய - சன்மார்க்க எழுச்சியை உருவாக்கினார்கள் 
கண்ணியமிகு காயிதேமில்லத் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்கள் நாடெங்கும் நடைப்பெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று அறிவார்ந்த உரையாற்றியுள்ளர்கள் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1971 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற  மீலாத் விழாவில் உரையாற்றியபோது .
பெருமானார்  ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வைப்பற்றி பேசுவதால் - பேணிப்பின்பற்றுவதால் நாமும் பரிசுத்தம் பெறுகிறோம் நாங்களெல்லாம் சின்னச்சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் ஊரான திருநெல்வேலிபேட்டையில் வருடந்தோறும் மீலாத் தொடர் சொற்பொழிவு நடைபெறும் அப்போது மிகச்சிறந்த உலமாக்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள் வானமும் இடிந்து விடலாம் பூமியும் பிளந்து விடலாம் அல்லாஹுத்தஆலாவின்  சொல்லும் ரசூல் கறீம்(ஸல்) அவர்களின் சொல்லும் பொய் ஆகாது என்று கூறியதை காயிதே மில்லத் அவர்கள் உரையில் குறிப்பிட்டதை கேட்டு நெஞ்சம் நெகிழ்கிறேன் அவ்விழாவில் அடியேனும் கலந்துக்கொண்டு உரையாற்றினேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் இச்செய்தியை அறமுரசு நாளிதழிலும் காயிதேமில்லத் அவர்களின் அதிராம்பட்டினம் மீலாத் விழா உரையை எழுதி பதிவுச் செய்துள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பணியாற்றிய சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தமிழகமெங்கும் நடைப்பெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று  வள்ளல் நபிகள்  பெருமானார் அவர்களின் வாழ்வைப்பற்றி சந்தனத் தமிழில் உரையாற்றியச்செய்தி மறக்க முடியாத செய்தியாகும் .
நாவலர் யூசுப் சாஹிப் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளராக பணியாற்றிய மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப் சாஹிப் அவர்கள் பட்டி தொட்டியல்லாம் நடைபெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று நாள்தோறும் 2 மணிநேரம், 3 மணிநேரம் எழுச்சி உரையற்றிய செய்தி சரித்திர செய்தியாகும்.
முனீருல்  மில்லத் பேராசிரியர் 
நம் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தன் இளம் வயதிலிருந்து தமிழகம் ,அரபகம் ,அமீரகம் ,சீனா ,தாய்லாந்த் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் மீலாத் விழாக்களில்  பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார் .
நம் உயிரினும் மேலான உத்தம நபிகள் பெருமானார் ரசூல் கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை நாடெங்கும்,ஊரெங்கும் நடத்தி அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் பூத்துக் குலுங்கச்செய்வோம் வாரீர்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்வைப்பேணி பின்பற்றி வாழ்ந்து வெற்றியாளர்களாக திகழ நம் அனைவர்களுக்கும் கருணையுள்ள ரஹ்மான் அருள் புரிவானாக !